இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 9000ஐ கடந்துவிட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. கொரோனாவால் மக்கள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

சொந்த பிள்ளைகளிடமும் அன்பானவர்களிடமும் கூட இடைவெளியை பின்பற்ற வேண்டிய மோசமான நிலை, கொரோனாவால் உருவாகியுள்ளது. கொரோனாவால் இறந்த தங்களது சொந்தங்களை பார்க்க முடியாத அவல நிலை உள்ளது. அந்தளவிற்கு மோசமான சூழலை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிஹி ஜமாத்திற்கு விருத்தாச்சலத்தை சேர்ந்த மஜீத் முஸ்தபா என்ற 69 வயது தந்தையும் ரஹ்மதுல்லா என்ற அவரது 49 வயது மகனும் சென்றிருந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பும் நிஜாமுதீன் மார்கஸில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, தந்தையும் மகனும் டெல்லி தீன் தயாள் மருத்துவமனையில் கடந்த மார்ச் 31ம் தேதி பரிசோதிக்கப்பட்டனர். அவர்களுக்கு 3 பரிசோதனைகள் மேற்கொண்டபிறகு, ஏப்ரல் 7ம் தேதி லோக்நாயக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதற்கு மறுநாளே மஜீத்தின்(தந்தை) உடல்நிலை மோசமடைந்துவிட்டதால் அவர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி கடந்த 9ம் தேதி நள்ளிரவு இறந்துவிட்டார். மஜீத் இறந்த தகவல் அவரது மகனுக்கு மறுநாள் காலை தெரிவிக்கப்பட்டதுடன், குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மஜீத்தின் உடலை டெல்லியிலேயே நல்லடக்கம் செய்யும்படி அவரது மனைவி விருத்தாச்சலம் ஆட்சியர் மூலமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மஜீத்தின் உடல் டெல்லியிலேயே நல்லடக்கம் செய்யும் பணியை டெல்லி அரசு மேற்கொண்டது. ஆனால் கடைசி வரை ரஹமதுல்லாவால் அவரது தந்தையை பார்க்க முடியவில்லை. ஒரே மருத்துவமனையில் வெவ்வேறு தளங்களில் இருந்தும் கூட(மஜீத் ஐசியூவில் இருந்தார் - அது வேறு தளம்) தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாத, யாருக்குமே ஏற்படக்கூடாத நிலை ஏற்பட்டுள்ளது. தீன் தயாள் மருத்துவமனையிலிருந்து லோக் நாயக் அரசு மருத்துவமனைக்கு வந்த அந்த ஒருநாள் மட்டும் இரவு 3 மணி நேரம் மட்டும் தந்தையும் மகனும் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் அதன்பின்னர் இருவரும் சந்தித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. கடைசியில் தனது தந்தை இறந்த பின்பு கூட ரஹ்மதுல்லாவால் தந்தையின் உடலை பார்த்து இறுதியஞ்சலி செலுத்த முடியாமல் போனது. ஆனால் ரஹ்மதுல்லாவுக்கு செய்யப்பட்ட 2 பரிசோதனைகளிலும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. கொரோனாவால் இதுமாதிரியான பரிதாபமான சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.