தேசப்பற்று என்பது எந்த ஒரு கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது என்று பாஜகவை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழாம் பொருத்தமாக இருந்த பாஜக - சிவசேனா கூட்டணி, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அணி சேர்ந்திருக்கின்றன. இதனால், கடந்த காலங்களைபோல  பாஜகவை சிவசேனா இனி விமர்சிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு பொய்த்து போயிருக்கிறது. வழக்கம் போல பாஜகவை அக்கடி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வில், பாஜகவை கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதியுள்ளது. 
அந்தத் தலையங்கத்தில், “நம் நாட்டு விமானப் படை வீரர்கள் நடத்திய வீரதீர தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதும் தவறு. அதேபோல வீரர்களின் வீரதீர செயலை காட்டி ஓட்டு கேட்பதும் தவறு. டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் மனோஜ் திவாரி, ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து மக்களிடம் ஓட்டு கேட்பது வீரர்களை அவமதிக்கும் செயல்.
இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை பாஜக அரசியல் ஆக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டை உறுதி செய்வது போல, இச்செயல் அமைந்துள்ளது. தேர்தல் ஆணையம் தலையிட்டு இதற்கு முடிவுகட்ட வேண்டும். தேசப்பற்று என்பது எந்த ஒரு கட்சிக்கும் ஏகபோக உரிமை கிடையாது. தங்களை விமர்சிக்கும் அரசியல் எதிரிகளை தேச விரோதி என முத்திரை குத்துவது பேச்சுரிமையை நசுக்கும் செயல்.
பாஜகவை இவ்வாறு தாறுமாறாக விமர்சித்து சிவசேனா தலையங்கம் எழுதியுள்ளது. இந்தத் தலையங்கம் மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.