மான் கி பாத் எனப்படும் மனதில் இருந்து பேசுகிறேன் என்ற நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, பாகிஸ்தானிடம் துப்பாக்கி மூலம் பேசுங்கள் என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி அறிவுரை கூறியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரை கொலைசெய்து அவர்களின் தலையை பாகிஸ்தான் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் அனைத்துக் கட்சிகளையும் பெரியஅளவில் கண்டனத்தையும், கோபத்தையும் வரவழைத்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி இதுவரை இந்த சம்பவம் குறித்து கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.

இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் “ பா.ஜனதா ஆட்சியில் இதுபோல் ஒரு வீரரின் தலை துண்டிக்கப்பட்டால், 10 பாகிஸ்தானிய வீரர்களின் தலையை வெட்டி சாய்ப்போம் எனத் தேர்தல் நேரத்தல் கூறியது. இந்த 2 வீரர்களின் தலைக்கு பதிலாக எத்தனை வீரர்களின் தலையை வெட்டி கொண்டு வரப்போகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

பா.ஜனதா கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “ பிரதமர் மோடி இன்னும் மனதில் இருந்து பேசுகிறேன்(மான்கி பாத்) என்று கூறாமல், 2 இந்திய வீரர்களின் கொலைக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு துப்பாக்கி மூலம் பிரதமர் மோடி பேச வேண்டும்” என அறிவுரை கூறியுள்ளார்.

சிவசேனா கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ராம்தான் காதம் கூறுகையில், “ பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இன்னும் எத்தனை இந்திய வீரர்கள் உயிர் பலியாக வேண்டும், எத்தனை இந்திய பெண்கள் விதவைகளாக ஆக வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டுவதை பிரதமர் மோடி நிறுத்திவிட்டு, நாட்டின் பாதுகாப்பு விசயத்திலும் மோடி அக்கறை காட்ட வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் போன்று மறுபடியும் ஒரு தாக்கலுதலை நடத்தி பாகிஸ்தானை நிலைகுலையச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.