இந்திய எம்.பி.க்கள் குறித்த சிங்கப்பூர் பிரதமர் பேச்சு தேவையற்றது: தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம்
இந்திய எம்.பி.க்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் , நேரு இந்தியா என்று அழைத்து சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் நாடாளுமன்றத்தில் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய எம்.பி.க்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் , நேரு இந்தியா என்று அழைத்து சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் நாடாளுமன்றத்தில் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் பேசியது தேவையற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கடந்த 15ம் தேதி பிரதமர் லூங் பேசினார். அப்போது, நேருவின் இந்தியா என்று கூறி முன்னாள் பிரதமர் ஜவஹரலால் நேருவைப் புகழ்ந்தார். அதுமட்டுமல்லாமல், இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் டேவிட் பென் குரியனையும் லூங் புகழந்தார். அவர் பேசியதாவது:
சுதந்திரத்துக்காகப் போராடி, அதைப் பெற்றுக்கொடுத்த தலைவர்கள் விதிவிலக்காகவும், துணிச்சல் மிக்கவர்களாகவும், கலாச்சாரம் மிக்கவர்களாகவும், சிறப்பான திறன்மிக்கவர்களாக இருந்தார்கள். தேசத்துக்காக நெருப்பிலிருந்து வெளிவந்தவர்களைப்போல் தேசத்துக்காக தீரத்துடன் செயல்பட்டு விடுதலைக்காகப் போராடினார்கள். டேவிட் பென் குரியன், ஜவஹர்லால் நேரு போன்றோர் தங்கள் தேசத்தின் விடுதலைக்காகப் போராடினார்கள், நம்நாட்டிலும் அதுபோன்ற தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அடுத்துவந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர்கள் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களிலிருந்து நழுவிவிட்டனர்.
ஆனால், நேருவின் இந்தியாவில் இன்றுள்ள எம்.பி.க்கள் பாதிப்பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதிலும் பலாத்காரம், கொலைக்குற்றச்சாட்டுகள் கூட இருக்கும் எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இந்த குற்றச்சாட்டுகள் அரசியல்ரீதியாக புனையப்பட்டவை என்றுகூட கூறப்படுகிறது. ஆனால், இதேபாதையில் சிங்கப்பூர் எம்.பி.க்கள் பயணித்துவிடக்கூடாது. அதைத்தடுக்க வேண்டியது அவசியம்.” இவ்வாறு லூங் தெரிவித்தார்
சிங்கப்பூரில் உள்ள தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தபோது இந்த கருத்தை பிரதமர் லூங் தெரிவித்தார்.
பிரதமர் லூங் இந்திய எம்.பி.க்கள் குறித்தும், நேருவின் இந்தியா என்று கூறியதற்கும் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சிங்கப்பூர் பிரதமரின் பேச்சு தேவையற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளது.
அதேசமயம், நேருவின் இந்தியா என்றும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை சிங்கப்பூர் பிரதமர் லூன் புகழ்ந்து பேசியதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றுள்ளார். சிங்கப்பூர் பிரதமர் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.