தேசிய கீதத்தை மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில், வீடியோ வடிவில் மத்திய அரசு நேற்று வௌியிட்டது.

3.35 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை கோவிந்த் நிஹாலினி இயக்கியுள்ளார். இந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் நடித்துள்ளார்.  டெல்லி செங்கோட்டை பின்னணியில் இந்த பாடல் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா,இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் தகவல் மையத்தின் பூடான் இயக்குநர் டேரீக் சீகர் ஆகியோர் கலந்து கொண்டு, வீடியோவை வௌியிட்டனர். இந்த வீடியோ கோவா, போபால், சண்டிகர், கோலாபூரில் முதல்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது.

இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வௌியிட்ட அறிக்கையில் “ மாற்றுத்திறனாளிகளுக்காக சைகை மொழியில் நமது தேசியகீதத்தை உருவாக்கி, அதை வௌியிடும் இந்த தருணத்தை பெருமையாகக் கருதுகிறோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.