அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து கவுதாரி பறவையை கொண்டு வந்து, பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு பரிசு கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநில அமைச்சருமான சித்துவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவ்ஜோத் சித்து, சுற்றுலா துறை அமைச்சராக உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன், அண்டை நாடான, பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற கர்தார்பூர் சிறப்பு பாதைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதல்வர் அமரீந்தரை சந்தித்த சித்து, பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்த, கவுதாரி பறவையை , அவருக்கு பரிசாக அளித்தார். இதனால், அவர் மீண்டும் சிக்கலில் சிக்கி கொண்டார்.

இதையடுத்து அவர், அனுமதியின்றி அந்நிய நாட்டில் இருந்து கவுதாரி பறவையை நம் நாட்டுக்கு எடுத்து வந்து, முதல்வருக்கு பரிசளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி, வனவிலங்கு ஆர்வலர் சந்தீப் ஜெயின் அளித்த புகாரின் அடிப்படையில், சித்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.