திருமண ஊர்வலத்தின்போது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது, எதிர்பாரா விதமாக மணமகன் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் புது டெல்லியில் நடந்துள்ளது.

இந்தியாவின் வட இந்திய நகரங்களில், திருமண ஊர்வலத்தன்போது, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது வழக்கம். அந்த வகையில் புது டெல்லியில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. சீமாபுரி நகரைச் சேர்ந்தவர் தீபக். நேற்று மாலை தீபக்கின் திருமணம் நடக்கவிருந்தது. 

இதையொட்டி மணமகன் ஊர்வலம் நடைபெற்றது. மணமகன் குதிரையில் அமர்ந்தபடி ஊர்வலம் வந்தார். அப்போது, திருமண விழா கொண்டாட்டத்தின் உற்சாக மிகுதியில், தீபக்கின் உறவினர் ஒருவர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். 

ஆனால், அந்த குண்டு எதிர்பாராத விதமாக, குதிரை மீது அமர்ந்து வந்த மணமகன் தீபக் மீது பாய்ந்தது. இதில் தீபக், நிலைகுலைந்து கீழே விழுந்தார். 

குண்டடி பட்ட தீபக்கை, அவரது உறவினர்கள் உடனடியாக மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீபக்கிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், தீபக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தீபக்கின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி பெறுவதற்கான உரிமம் பெற்றுள்ளவரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணமகன் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், தீபக்கின் உறவினர்கள், மணமகள் உள்ளிட்டோர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.