இந்தியாவில் உள்ள ஒரு சதவீத கோடீஸ்வரர்களிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து ஒரு ஆண்டுக்கும் அதிகமான மத்திய பட்ஜெட்டை தயாரிக்க முடியும் என்று உலக பொருளாதார கூட்டமைப்பில் ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதாரக் கூட்டமைப்பின் 50-வது ஆண்டுக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சமூக நல அமைப்பான ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலகில் மக்களிடையே சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதும் இடைவெளி விரிவடைந்து வருவதும், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை பெருகிவருவதும் அதிர்ச்சியாக இருக்கிறது. உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 5 நாட்கள் கூட்டத்தில் மக்களின் வருமானம், சமத்துவமின்மை ஆகியவை முக்கிய பேசு பொருளாக இருக்கும், அதிகமாக விவாதிக்கப்படும்.இந்த பூமியில் உள்ள 60 சதவீத மக்கள் அதாவது 450 கோடி மக்களிடம் இருக்கும் சொத்துக்கு இணையாக உலக அளவில் உள்ள 2 ஆயிரத்து 153 கோடீஸ்வரர்களின் சொத்து இருக்கிறது.உலக அளவில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வசிக்கும் அனைத்து பெண்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு, உலகளவில் 22 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது.

ஏழை, பணக்காரர்கள் இடைவெளி அதிகரிப்பு ஒவ்வொரு நாட்டிலும், கண்டத்திலும் பெரும் அமைதியற்ற சூழலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வருமான ஏற்றத் தாழ்வுகள் அதிகமாக இருக்கிறது
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவில் உள்ள 63 கோடீஸ்வர்களிடம் இருக்கும் சொத்து ஒரு ஆண்டுக்கும் அதிகமாக இந்திய அரசு பட்ஜெட்டுக்கு செலவிடும் தொகையை வைத்துள்ளனர். அதாவது கடந்த 2018-19ம் ஆண்டுபட்ஜெட்டுக்கு 24 லட்சத்துக்கு 42 ஆயிரத்து 200 கோடி இந்திய அரசு செலவிட்டது அதற்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளனர்.இந்தியாவில் உள்ள 95.30 கோடி மக்கள் அதாவது 70 சதவீத மக்களிடம் இருக்கும் சொத்து மதிப்புக்கு இணையாக உள்ள நாட்டில் உள்ள ஒரு சதவீத பெருங்கோடீஸ்வரர்களிடம் சொத்து உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது