தனியார் கார் நிறுவனமான உபர் கேப் புக் செய்த பெண்ணிடம், அதன் ஓட்டுநர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் புகாரை அடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியைச் சேர்ந்தவர் ரோகிணி (29). எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் இவர் பணிபுரிந்து வருகிறார். ரோகிணி, கடந்த வாரம் அரியானாவில் உள்ள குண்டலி எனும் இடத்தில் இருந்து தனது வீட்டுக்கு செல்ல உபர் கேப் ஒன்றை புக் செய்துள்ளார்.

புக் செய்தவுடன் உபர் கேப், அவர் இருக்கும் இடத்திற்கு சென்றடைந்தது. இதையடுத்து, காரில் ஏறியுள்ளார் ரோகினி. சரியான திசையில் சென்று கொண்டிருந்த கார், பாதை மாறி ச் சென்றது. அதன் பிறகு, கார் ஓட்டுநர் மற்றொரு வழியை தேர்வு செய்து ஓட்டிச் சென்றுள்ளார். இதனைக் கவனித்த ரோகினி, தவறான திசையில் செல்கிறீர்கள் என்று ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஓட்டுநரோ, ரோகினி கூறுவதை கேட்காமல், காரை வேகமாக செலுத்தி உள்ளார். அப்போது சிக்னல் ஒன்றை கடந்து செல்வதற்காக காரை நிறுத்தியுள்ளார் ஓட்டுநர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காரில் இருந்து தப்பிக்க ரோகினி முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் சிக்னல் கிடைக்கவே காரை வேகமாக செலுத்தியுள்ளார் கார் ஓட்டுநர்.

காரை ஓட்டிக் கொண்டே, ரோகினியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் ஓட்டுநர். சில நிமிடங்களில் காரின் வேகம் குறைந்துள்ளது. இதனைப் பயன்படுத்த நினைத்த ரோகினி, காரின் கதவை திறந்து குதித்த தப்பித்துள்ளார். இதையடுத்து, அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்ற ரோகினி, புகார் கொடுத்தார். ரோகினியின் புகாரை பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நகரை இரண்டு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு அவரைக் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் அரியனா மாநிலம், கன்னூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பெயர் சஞ்சீவ் (22) என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தின் ஓட்டுநராக பதிவு செய்யாமல் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சஞ்சீவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.