Sexual complaint against veterinary director
அண்மைக் காலமாக சிறுமிகள், பெண்கள் ஆகியோர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். காஷ்மீர், குஜராத், மத்திய பிரதேசம் என இந்தியாவின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி, பாலியல் ரீதியாக 4 மாணவிகளை நிர்பந்தப்படுத்தியதை அடுத்து, கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி கால்நடை துறை இயக்குநர், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இயக்குநரை கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இன்று இயக்குநர் அலுவலகத்தில் நுழைந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அதே துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக வந்த புகார்களில் அதிகளவு புகார்கள் காலநடை துறை இயக்குநர் பத்மநாபன் மீது கூறப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளிக்க அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், பத்மநாபன், ஆஜராகாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னை விசாரிப்பதற்கு தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்த நிலையில் பத்மநாபனை கைது செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தினர் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவரது அறையில் நுழைந்த துறை ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
