அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 9 பேர்  காயங்களோடு மீட்கப்பட்டுள்ளனர்.

 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஸ்வார்ன் பாக் காலனியில் இரண்டு மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீட்டில் முன் பகுதியில் உள்ள மின் விநியோக அமைப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மெல்ல மெல்ல பரவிய தீ அடுக்குமாடி குடியிருப்பின் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் மற்றும் கார் மேல் பரவி கொளுந்து விட்டு எரிந்துள்ளது. இந்த தீயானது கட்டிடம் முழுவதும் பற்றிக்கொண்டு எரிய தொடங்கியுள்ளது.

7பேர் உடல் கருகி பலியான பரிதாபம்

அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதால், வீட்டில் உள்ளவர்களுக்கு என்ன நடைபெறுகிறது என்று உணர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மேல் வீடு முழுவதும் கரும்புகை ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தீ விபத்தில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 9 பேர் மீட்கப்பட்ட நிலையில் 5 பேர் தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அடுக்குமாடி குடியிருப்பு தளத்தின் ஒவ்வொரு கட்டிடத்திலும் தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்படாதது தான் தீ விபத்தில் உயிரிழப்பிற்கு காரணம் என கூறினர். இதனையடுத்து கட்டிடத்தின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.