பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில், ராகுல் காந்தி அறிவுறுத்தியதை அடுத்து காங்கிரசின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். 

முகலாயர் ஆட்சியை ஒப்பிட்டு கூறிய கருத்தால் சர்ச்சையில் சிக்கிய மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடி குறித்த பேச்சால் மீண்டும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். 
மோடி தரம் தாழ்ந்த மனிதர் என்று பொருள் படும் வகையில் “நீச் ஆத்மி” என மணிசங்கர் அய்யர் பேசிருந்தார். 

அதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே, நீச் ஆத்மி பேச்சு சர்ச்சை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, அண்மைக் காலமாக பாஜகவினரும், பிரதமர் மோடியும், காங்கிரசை ஐந்தாம் தர மொழியில் மிக மோசமாக விமர்சித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். 

காங்கிரசுக்கென்று ஒரு பாரம்பரியமும், பண்பாடும் இருப்பதால் மணிசங்கர் அய்யரின் பேச்சை தாம் ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மணிசங்கர் அய்யர் அவரது கருத்துக்காக மன்னிப்புக் கோருவார் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியினர் தம்மை தாழ்ந்தவர் என விமர்சிப்பது குறித்து கவலைப்படவில்லை என்றும், மக்களுக்காக தாம் ஆற்றும் பணி உயர்ந்தது என்றும் மோடி பதிலடி கொடுத்தார்.

இருந்தாலும் ராகுலின் அறிவுறுத்தலின்படி தமது பேச்சுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் காங்கிரஸ் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு அவரது மொழியிலேயே பதிலளிக்க நேர்ந்ததாகவும் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.