security law for namo apps

நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் மத்தியஅரசு சட்டம் இயற்ற உள்ளது. இதன் மூலம் “ஆதார்”, “பிம் ஆப்ஸ்”, “நமோ ஆப்ஸ்” உள்ளிட்ட மத்திய அரசின் தளங்களில் இருந்து தனிநபரின் விவரங்களை திருடுவது குற்றமாகக் கருதப்படும்.

அதுமட்டுமல்லாமல், ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபரின் விவரங்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பாகஇருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது.

இந்த சட்டத்தின் முன்வடிவு பிரதமர் மோடியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது, அவர் ஒப்புதல் பெற்றவுடன், அடுத்தகட்டப் பணிகள் தொடங்கும் .

இது குறித்து மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தனிநபரின் விவரங்களை பாதுகாக்கும் சட்டம் உருவாக்கும் பணியில் மத்திய மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.இந்த சட்டத்தின் முன்வடிவு பிரதமர் மோடியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அவர் ஒப்புதல் கொடுத்தவுடன், செயல்பாட்டுக் குழுஅமைக்கப்பட்டு சட்டத்தின் என்னென்ன சரத்துக்கள் சேர்க்கலாம், எப்படி தகவல்களை பாதுகாக்க முடியும் உள்ளிட்ட விவரங்களை சேர்க்கும் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கும். அது மட்டுமல்லாமல், இந்த சட்டம் குறித்து ஆலோசிக்க அனைத்து தரப்பினரையும் நாங்கள் அழைத்துள்ளோம்.

இன்றையத் தேவை, எதிர்காலத் தேவைக்கு தகுந்தார்போல் இந்த சட்டம் வடிவமைக்கப்பட வேண்டும். குறிப்பாக தனநபரின் விவரங்கள் எந்த காரணம் கொண்டு தவறாகப்பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்றார்.

இப்போது நம்நாட்டில் தனிநபரின் விவரங்களை பாதுகாக்க தனிச்சட்டங்கள் ஏதும் இல்லை, யாரும் தனிப்பட்ட விவரங்களை பாதுகாத்து ஒழுங்குபடுத்தி வைக்க முடியாத சூழல் உள்ளது. இது தொடர்பான சட்டம் தகவல் தொழில்நுட்பச்சட்டத்தில் இருந்தபோதிலும், அது பல் இல்லாத யாரையும் தண்டிக்க இயலாத சட்டமாக இருக்கிறது, அதனால், பயணில்லை.

இதற்கு முன்பு, நரேந்திரமோடி ஆப்ஸ், ஆதார் விவரங்களை திருடப்பட்ட போது யாரையும் தண்டிக்க இயலவில்லை. இதனால், மக்களின் தனிப்பட்ட விவரங்கள் குறித்த அச்சம் நிலவியது. ஆனால், புதிதாக கொண்டுவரப்படும் சட்டத்தின் மூலம், அடுத்தவர் விவரங்களை திருடினாலோ, அல்லது தவறாகப் பயன்படுத்தினாலோ, அல்லது முறைகேடாக நடந்து கொண்டாலோ அது கடுமையாக குற்றமாகக் கருதப்பட்டு, தண்டனையும் கடுமையாக்கப்படும் என்று மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.