ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் கர்நாடகத்தில் நாளை (பிப்.,14) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக பெங்களூரை தொடர்ந்து உடுப்பி மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வகுப்புகள் வர தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் பிற மாவட்ட கல்லூரிகளிலும் ஹிஜாப்புக்கு ஆதரவாக ஒருதரப்பும், எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பும் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் காவி நிற துப்பட்டா அணிந்து கல்லூரிகளுக்குள் சென்றனர். இதனால், சில கல்லூரிகளில் மாணவிகள் மதம் சார்ந்த உடை அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சீருடை அணிய கர்நாடக அரசு உத்தரவிட்டது. 

ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த அமர்வு தற்போது வழக்கை விசாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம் சார்ந்த ஆடைகள் அணிந்து மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

மேலும் வழக்கு விசாரணையை பிப்.,14(நாளை)க்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில் நாளை முதல் முதற்கட்டமாக உயர்நிலை பள்ளிகள் 10ம் வகுப்பு வரை மட்டும் திறக்கப்பட உள்ளது.பின்னர் பியூ உள்பட டிகிரி கல்லூரிகள் திறப்பது குறித்து முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால் ஹிஜாப் பிரச்னை உருவான உடுப்பி மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளை சுற்றியும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உடுப்பி மாவட்ட காவல்துறை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.