பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு  லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படடதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வரும், வினய்குமார் தலைமையிலான குழுவினர், சத்யநாராயண ராவ் மற்றும் ரூபாவிடம் ரகசியமான விசாரணை நடத்தினர்.

கர்நாடக சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா, பெங்களூரு மத்திய சிறையை ஆய்வு செய்து, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு , சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் அதற்காக சிறை அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இதையடுத்து, சிறை முறைகேடுகள் பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையில்,அரசு, விசாரணை கமிஷன் அமைத்தது. 

இந்நிலையில் வினய்குமார் குழுவினர், ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், டி.ஐ.ஜி., ரூபா ஆகியோரை, ரகசிய இடத்துக்கு வரவழைத்து, தனித்தனியாக விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விசாரணையின் போது, பெங்களூரு சிறையில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து, நேர்மையான முறையில் அறிக்கை அளித்துள்ளதாகவும், யாரையும் குறி வைத்து, அறிக்கை தயாரிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்த தகவல்களை பதிவு செய்து கொண்ட, விசாரணை கமிஷன் அதிகாரிகள், சிறை கண்காணிப்பாளர்களாக இருந்த, கிருஷ்ண குமார், மற்றும் அனிதாவிடம் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.