பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, விரைவில் பெரிய புத்தக பைகளை பள்ளிக்கு எடுத்து வர வேண்டியது இருக்காது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி
மத்திய அறிவியல் கல்வி அமைப்பு சார்பில் டெல்லியில் நேற்றுநடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது-
புத்தக சுமை குறைப்பு
பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகச் சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். பெரிய புத்தக பைகளை இனிவரும் காலத்தில் கொண்டுவர அவசியம் இருக்காது. அதற்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. தேவையில்லாமல் அதிக புத்தகங்களை கொண்டுவரத் தேவையில்லை.
அறிவுறுத்தல்
ஏற்கனவே சி.பி.எஸ்.இ. பள்ளித்துறை, 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் புத்தகப் பை கொண்டுவரத் தேவையில்லை என்றும், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் கொண்டு வந்தால் போதும் என அறிவுறுத்தியுள்ளது.
மாற்றம்
மேலும், பள்ளிக்குழந்தைகளுக்கு ‘பிராஜெக்ட்’ கொடுப்பதிலும் சில மாறுதல்களை செய்ய விரும்புகிறேன். ஏனென்றால், நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான ‘பிராஜெட்களை’ மாணவர்களைக் காட்டிலும், அவர்களின் பெற்றோர்கள் தான் செய்கிறார்கள். இதை மாற்ற விரும்புகிறேன்.
உண்மையில், தவறுகள் செய்தாலும் ‘பிராஜெட்களை’ மாணவர்கள் செய்தால் தான் அதில் இருந்து கற்றுக்கொள்ள முடியும். ஆசியர்கள், பெற்றோர்கள் உடன் இருந்து எப்படி செய்வது என வழிகாட்டி, நெறிப்படுத்த வேண்டும்.
பசுமை
பள்ளிகளில் பசுமையைக் கொண்டு வருவதற்காக, அதிகமான மரக்கன்றுகளை நடும் திட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். இந்த திட்டம் மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
