உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டும்தான் உண்டு என இரண்டு நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. 

நீதித்துறையின் உச்ச அமைப்பான உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே எடுக்கிறார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் முன்வைத்தனர். மேலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்பவர், நீதிபதிகளில் முதன்மையானவரே தவிர தலைவர் அல்ல எனவும் தெரிவித்தனர். 

நீதிபதிகளின் குற்றச்சாட்டை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அசோக் பூஷண், உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு வழக்கை ஒதுக்கீடு செய்யவும் நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளை உருவாக்கவும் விதிமுறைகளை வகுக்க வேண்டும். வழக்குகளை ஒதுக்கும் உரிமை தலைமை நீதிபதிக்கு மட்டுமே இருப்பது சரியல்ல. அதனால் அதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும் என அசோக் பூஷண் வலியுறுத்தியிருந்தார். 

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் வேணுகோபால் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்குத்தான் உண்டு என்பதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது. அதனால் அவருக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்ய முழு உரிமை உண்டும். இந்தியாவில் நீதித்துறையின் தலைவராகவும் உச்சநீதிமன்ற செயல்பாடுகளின் தலைவராகவும் தலைமை நீதிபதி உள்ளார். நீதிமன்றத்தில் அனைத்து செயல்பாடுகளிலும் அவருக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது. எனவே, வழக்குகளை எந்த அமர்வுக்கு ஒதுக்குவது என்பதை அவரே முடிவு செய்ய அதிகாரம் உள்ளது என அதிரடியாக தீர்ப்பளித்தனர்.