நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை, அவரது தாயார் வரவேற்றுள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டில், டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தனியார் பேருந்தில் இருவரும் ஏறினர். ஓட்டுநர் உள்பட பேருந்துக்குள் இருந்த 6 பேரும் குடிபோதையில் இருந்ததால், அவர்கள் மீது மதுவாடை வீசியது. இதனால் ஆத்திரமடைந்த நிர்பயா, அவர்களை திட்டியதாகக் கூறப்படுகிறது.நிர்பயா திட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாத 6 பேரும், நிர்பயாவின் நண்பரை தாக்கியதுடன், அவரது கண் முன்னாடியே நிர்பாயாவை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்படியும் ஆத்திரம் தீராத அவர்கள், நிர்பயாவின் மர்ம உறுப்பிலும் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதனால் படுகாயமடைந்த நிர்பயாவும், அவரது நண்பரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிர்பயாவின் நண்பர் ஓரிரு நாட்களில் வீடு திரும்பிய நிலையில், படுகாயம் அடைந்த நிர்பயா, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்த நிலையிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், 6 பேரை கைது செய்தனர். இதில் ஒரு குற்றவாளி, மைனர் சிறுவன் என்பதால், 3 ஆண்டு சிறை தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டான். இதர குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதில் ஒருவர் சிறையிலேயே உயிரிழந்த நிலையில், எஞ்சிய 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில், அக்‌ஷய் குமார் சிங் தவிர, எஞ்சிய 3 குற்றவாளிகள் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் தங்களது மரண தண்டனையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனால், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மரண தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 09) தீர்ப்பு அளித்துள்ளது. இதனை நிர்பயாவின் தாய் ஆஷா தேவி வரவேற்றுள்ளார். நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறிய அவர், குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை கிடைத்துள்ளது. நமது போராட்டம் இத்துடன் முடியவில்லை. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேறும் வரை சட்ட ரீதியாக நாம் போராட வேண்டியுள்ளது, எனவே குற்றவாளிகளுக்கு விரைவில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.