சில்லறை தேவையைக் கருத்தில் கொண்டு விரைவில் வங்கிகள் மூலம் ரூ. 50 , ரூ.20 நோட்டுக்களை மக்களுக்கு பட்டுவாடா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார்.

 பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ மக்கள் தங்களிடமுள்ள செல்லாத ரூபாய்களை வங்கியில் கொடுத்து, புதிய நோட்டுக்களை பெறும்போது, அதிக மதிப்புள்ள ரூ. 2000 , ரூ500 நோட்டுக்களை பெற்றுச் செல்கின்றனர்.

இதனால், சில்லறை தட்டுப்பாட்டால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதைப் போக்க அடுத்து வரும் நாட்களில் வங்கிகளில் ரூ. 20, ரூ.50 நோட்டுக்கள் கிடைக்குமாறு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிகவிரைவில் இந்த நோட்டுக்கள் சில்லறையாக கொடுக்கப்படும்.

தென்மாநிலங்களில், வங்கி ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏறக்குறைய 50 சதவீதம் குறைந்துவிட்டது. ஏ.டி.எம் களில் 100 ரூபாய் நோட்டு விரைவாக தீர்ந்துவிடுவதால்தான் பல ஏ.டி.எம்.கள் பூட்டப்பட்டு இருக்கின்றன. அதில் ரூபாய் நோட்டுக்களையும் வைக்குமாறு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழுவையும் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ். முந்த்ரா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தீர்வு காணும்'' என்று தெரிவித்தார்.