தற்போது பயன்படுத்து வரும் ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு சிப் அடிப்படையிலான புதிய ஏடிஎம் கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

ஏடிஎம் கார்டுகளை ஸ்கிம்மர் கருவிகளின் மூலம் நகல் எடுத்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனவே வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டு தகவல்களை திருட முடியாத வகையிலும், மோசடியிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிப் அடிப்படையிலான கார்டுகளை வழங்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை அடுத்து, வாடிக்கையாளர்களுக்கு சிப் அடிப்படையிலான ஏடிஎம் கார்டுகளை வழங்க எஸ்பிஐ வங்கி தயாராகிவிட்டது. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கியின் டுவிட்டர் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவில், வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதில், அன்பார்ந்த வாடிக்கையாளர்களே, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி உங்களது பழைய ஏடிஎம் கார்டுகளை மாற்ற வேண்டும். இந்த ஆண்டின் இறுதிக்குள் உங்களது பழைய ஏடிஎம் கார்டுகளை சமர்ப்பித்துவிட்டு சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இது இலவச சேவை தான். இதற்காக எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே சிப் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துபவர்கள் கார்டுகளை மாற்ற வேண்டிய தேவை இருக்காது. எஸ்பிஐ வங்கி சார்பில் இதுவரை 28.9 கோடி ஏடிஎம்(டெபிட்) கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஏற்கெனவே சிப் தொழில்நுட்பத்தில் உள்ளது. இப்போது, அனைத்து கார்டுகளையும் சிப் தொழில்நுட்பத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ மட்டுமல்லாது அனைத்து வங்கிகளுமே கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்கி வருகின்றன.