டிஜிட்டல் இந்தியா உலகுக்கே ஒளி பாய்ச்சும் திட்டம்: சத்யா நாதெள்ளா கருத்து
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் சத்யா நாதெள்ளா கூறியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சத்யா நாதெள்ளா இந்தியாப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பு பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள சத்யா நாதெள்ளா, நுட்பமான உரையாடலுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். பிரதமரைச் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
மேலும், “டிஜிட்டல் மாற்றங்கள் மூலம் நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றும் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா திட்டம் உலகுக்கே ஒளி பாய்ச்சுவதாக விளங்கும் என்பதை உணர்ந்து தேவையான உதவிகளைச் செய்ய முன்வருவதாகவும் சத்யா நாதெள்ளா குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருடனான சந்திப்புக்கு முன்னதாக, செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்ற மைக்டோரசாப் நிறுவனத்தின் மாநாட்டில் சத்யா நாதெள்ளா கலந்துகொண்டார்.
அண்மையில் இந்தியா வந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அவர், இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியான நல்லுறவை பேண விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.