பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள கட்சியின் நிதீஷ் குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதில் தனக்கு உடன்பாடில்லை என அக்கட்சியின் தலைவர் சரத் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பீகாரில்  ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதில் வெற்றி பெற்ற மெகா கூட்டணியில்  நிதீஷ் குமார் முதலமைச்ராகவும், லாலுவின் மகன் தேஜஸ்வி துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஆனால் திடீர்  திருப்பமாக கடந்த வாரம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதலமைச்சர்  பதவியை ராஜினாமா செய்தார். மறுநாளே, பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்றார்.

நிதிஷ் குமார் முதல்மைச்சராவும்,  சுஷில் குமார் மோடி துணை முதலமைச்சரைகவும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் எந்த கருத்தும் கூறாமல் மவுனம் காத்து வந்தார். 

இதனால், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசில் சரத்யாதவுக்கு மந்திரி பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாகவே சரத் யாதவ் அமைதி காப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத் யாதவ், நிதிஷ் குமார் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தற்கு  தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்களித்தது இதற்காக அல்ல என்றும் பீகாரில் நடைபெற்றது துரதிருஷ்டவசமானது  என்றும் தெரிவித்தார். சரத் யாதவின் இந்த அறிவிப்பு நிதீஷ் – பாஜக கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.