பா.ஜ.கவுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ், புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பீகார் சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ் குமார் அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், லாலுவின் மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி மீதான ஊழல் விவகாரத்தை காரணமாக வைத்து கூட்டணியை உடைத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ். எனினும், ஒரே இரவில் பா.ஜ.வுடன் கைகோர்த்த நிதிஷ் குமார் மறுநாளே மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.

கூட்டணியை மாற்றிய விவகாரத்தில் மூத்த தலைவரான சரத்யாதவ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் சரத்யாதவ், ஐக்கிய ஜனதா தளத்தில் அதிருப்தியாளர்களை ஒன்று திரட்டி நிதிஷிடமிருந்து பிரிந்து புதிய கட்சி துவங்குவது குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வரும் 19-ம் தேதி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. இதற்கு முன் 17-ம் தேதி தனது ஆதரவாளர்களை கூட்டி புதிய கட்சியை துவக்குவது குறித்து தன் நண்பர்களுடன் தீவிர ஆலோசனை நடத்த சரதயாதவ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.