உத்தரபிரதேசத்தின் ஆளுங்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் இன்று தலைவரானார். இதற்கு முலாயம்சிங்க எடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இன்று அகிலேஷ் தலைமையில் நடந்த கட்சி கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைவராக இருக்கும் சிவ்பால் மற்றும் அமர்சிங்கை நீக்க வேண்டும் என்றும், அகிலேஷை கட்சியின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

கடந்த சில மாதங்களாக அகிலேஷ் மற்றும் அவரது சித்தப்பா சிவ்பால் ஆகியோர் இடையே அவ்வப்போது கருத்து மோதலும், பதவி பறிப்பும் நடந்து வந்தது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் அகிலேஷ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக முலாயம்சிங் அறிவித்தார். ஆனால் 24 மணி நேரத்தில் இந்த முடிவு வாபஸ் பெறப்பட்டது. மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று அகிலேஷ் ஆதரவாளர்கள் ஒரு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் பங்கேற்று அகிலேஷ் பேசுகையில், சிவ்பால் கட்சியில் குழப்பம் ஏற்படுத்துகிறார். அவர் முலாயம்சிங்கிற்கு எதிராக செயல்படுகிறார். கட்சிக்கு எதிராக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என பலர் சதி தீட்டுகின்றனர். நான் எப்போதும் முலாயம்சிங்கை மதிப்பவனாக இருக்கிறேன். அவர் தான் நமது கட்சியை வழிநடத்தி செல்ல வேண்டும் என்றார்.

மூத்த நிர்வாகியான ராம்கோபால் யாதவ் பேசுகையில்: கட்சி தலைவர் பொறுப்பில் இருந்த சிவ்பாலை நீக்கி விட்டோம். அகிலேஷ் தான் எங்கள் கட்சியின் தலைவர். முலாயம் சிங் எங்களுக்கு வழிகாட்டி. இது தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றி விட்டோம் என்றார்.

இன்று நடந்த கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என முலாயம்சிங் எச்சரித்திருந்த வேளையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முலாயம் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், தற்போது கட்சி தொண்டர்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இரு அணியினரும் மோதிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.