அனுமதி காலாவதியான துப்பாக்கியை சல்மான்கான் மான் வேட்டையாடியதாக கூறப்பட்ட வழக்கில் அவரை விடுதலை செய்து ஜோத்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படப்பிடிப்புக்காக கடந்த 1998ம் ஆண்டு அக்டோபரில் ராஜஸ்தான் சென்ற நடிகர் சல்மான் கான், அரியவகை மான்களை உரிமம் முடிந்துபோன துப்பாக்கிகளை வைத்து வேட்டையாடியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பு 18ம் தேதி வழங்கப்படும் என்று ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதாலும், சல்மான் கான் ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிலும், கோர்ட் வளாகத்தை சுற்றிலும் ஏராளமான ஊடக நிருபர்களும், பொதுமக்களும் குவிந்தனர். இதனால் அப்பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இன்று காலை 11 மணியளவில் சல்மான் கான் அவரது சகோதரி அல்விரா கான் ஆகியோர் கோர்ட் வளாகத்தை வந்தடைந்தனர். பின்னர், இவ்வழக்கில் சல்மான் கானை விடுதலை செய்து ஜோத்பூர் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
சல்மான் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை போதுமான ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு வக்கீல்கள் தவறியதால் இந்த வழக்கில் இருந்து சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டதாக அவரது வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்புக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக தீர்ப்பின் நகல் கிடைத்தப்பின்னர் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என சல்மான் கானுக்கு எதிராக இவ்வழக்கை தொடர்ந்த விஷ்னோயி சமாஜ் இயக்கத்தின் வழக்கறிஞர் நிரூபர்களிடம் தெரிவித்துள்ளார்.
