யூரி ராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதலை எதிர்த்து நாட்டின் நலனுக்காக ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்திய நிலையில், அதிலும் கூட பிரதமர் மோடி ஆதாயம் தேடுவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 3,500 கிலோ மீட்டர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
குறிப்பாக, யூரி ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ராணுவத்தின் நடவடிக்கை மீது தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், ஆனால், நாட்டின் நலனுக்காக ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தத்திலும், பிரதமர் மோடி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கு 7-வது ஊதியக்குழு குறிப்பிட்டபடி சம்பள உயர்வு அளிக்க மோடி முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மின்சார கட்டணம் குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளையும் பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
