கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் பசியை போக்குவதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ரூ.9 கோடி வழங்கியுள்ளார்.

ஈஷாவின் சமூக நலப் பிரிவான ‘ஈஷா அவுட்ரீச்’ அமைப்பானது கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் கோடிக்கணக்கான பொருள் செலவில் நடைபெறுகின்றன. எனவே, இதற்கு நிதி திரட்டும் விதமாக சத்குரு அவர்கள் 2 ஓவியங்களை வரைந்தார். அவருடைய முதல் ஓவியம் ரூ.4.14 கோடிக்கு ஏலம்போனது.

இதையடுத்து, ஈஷாவின் பிரசித்தி பெற்ற காளையான ‘பைரவா’ வின் நினைவாக சத்குரு வரைந்த ஓவியம் கடந்த மாதம் ஆன்லைன் வழியாக ஏலம்விடப்பட்டது. ஏலத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் (ஜூலை 5) அந்த ஓவியம் ரூ.5.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த 2 ஓவியங்கள் மூலம் கிடைத்த ரூ.9.2 கோடி நிதியை சத்குரு ’ஈஷா அவுட்ரீச்’ சின் நிவாரணப் பணிகளுக்கு தனது பங்களிப்பாக வழங்கினார்.

2-வது ஓவியமானது முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை கொண்டு சத்குரு வரைந்துள்ளார். நாட்டு மாட்டு சாணம், கரி, மஞ்சள், சுண்ணாம்பு ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி அவர் அந்த ஓவியத்தை வரைந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆரம்பக் கட்டத்தை எட்டிய போதே, ‘உங்களை சுற்றியிருக்கும் ஒருவர் கூட பசியால் உயிரிழக்காமல் பார்த்து கொள்ளுங்கள்’ என்று ஈஷா தன்னார்வலர்களுக்கு சத்குரு வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.