Asianet News TamilAsianet News Tamil

மண் காப்போம் இயக்கத்தின் அடுத்தகட்டமாக 21 நாடுகளுக்கு பயணம்..! சத்குரு அறிவிப்பு

மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சத்குரு, வெறும் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
 

sadhguru announces his next phase of save soil campaign travel to 21 countries
Author
Coimbatore, First Published Jun 23, 2022, 8:00 AM IST

மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சத்குரு, வெறும் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆதியோகியில் நேற்று (ஜூன் 21) இரவு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:

இந்த 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தில் நான் பல ஆபத்தான தருணங்களை கடந்து வந்துள்ளேன். பைக் ஓட்டும்போது கவனம் மிக மிக அவசியம். ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிவேகமாக பைக் ஓட்டும் போது ஒரு நொடி கவனம் சிதறினாலும், விளைவு மிக மோசமாக இருக்கும். துபாய் போன்ற பாலைவன நாடுகளில் பைக் ஓட்டும் போது வெயில் 54 டிகிரி சுட்டெரித்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் செல்லும் போதும் வெயில் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு குளிர்ச்சியான சூழலை இங்கு தான் அனுபவிக்கிறேன்.

உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவின் மூலம்  இந்த 100 நாள் மோட்டார் சைக்கிகள் பயணம் நிறைவு அடைந்துவிட்டது. ஆனால், இனிமேல் தான் உண்மையில் கடினமான வேலை தொடங்க உள்ளது.  ‘மண் காப்போம்’ இயக்கத்தின் அடுத்த கட்டமாக, 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது பயணத்தை தொடங்க உள்ளேன்.

அடுத்த ஒன்றரை மாதத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கரிபீயன் நாடுகளில் உள்ள 21 முதல் 22 நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாடுகள் மண் வளப் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இயற்றுவதற்கு வலியுறுத்த உள்ளேன். அதுமட்டுமின்றி, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

எனவே, இந்த 100 நாள் பயணம் முடிந்துவிட்டது என நீங்கள் நினைத்து அமைதியாகவிட கூடாது. உலக நாடுகள் அனைத்து உரிய சட்டங்கள் இயற்றும் வரை நீங்கள் தொடர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வருடத்திற்கு தினமும் குறைந்தப்பட்சம் 15 நிமிடங்களாவது மண் வளப் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இதை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியாதவர்கள் மற்றவர்களுடன் நேரில் இது குறித்து பேச வேண்டும்.

இவ்வாறு சத்குரு பேசினார்.

மேலும், இப்பயணம் வெற்றி பெற உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாக சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், “நம் காலத்தின் அதிமுக்கியமான #SaveSoil இயக்கத்தை நிகழ்த்த வியக்கத்தக்க அர்ப்பணிப்புடனும் நோக்கத்துடனும் உலகெங்கும் ஒன்றிணைந்த ஈஷா குழுவிற்கு மகத்தான நன்றிகள். உங்கள் பிராந்தியங்களில் மண் காக்கும் கொள்கைகள் இயற்றப்படும் வரை முழுவீச்சில் தொடருமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

ஆதியோகி முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு எல்லையான பண்ணாரியில் இருந்து ஆதியோகி வரை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

‘மண் காப்போம்’ இயக்கத்துடன்  இதுவரை இந்தியாவின் 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. 74 நாடுகளும் பல்வேறு ஐ.நா அமைப்புகளும், 320 கோடி மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios