கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. வருடம் தொடரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். விஷு, மகர சங்கராந்தி, கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் கோவில் நடை திறக்கப்படும்.

கார்த்திகை மாதம் 1ம் தேதியில் இருந்து சபரிமலையில் மண்டல காலம் தொடங்கும். அதற்காக ஐப்பசி கடைசி நாளில் நடை திறக்கப்படும். அதுமுதல் 41 நாட்களுக்கு சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி சுமந்து, காட்டு வழியில் நடந்து, பதினெட்டாம் படி ஏறி சுவாமியை தரிசனம் செய்வார்கள். 

இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைகள் நாளை தொடங்குகிறது. இதற்காக இன்று மாலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு  பூஜைகள் நடந்தது. பின்னர் பதினெட்டாம்படிக்கு கீழே இருக்கும் கற்பூர ஆழியில் நெருப்பு மூடப்பட்டு புதிய மேல்சாந்தி பதவி ஏற்கும் நிகழ்வு நடந்தது. நாளை முதல் நெய் அபிஷேகம் தொடங்கும். இதனிடையே நாளை கார்த்திகை மாத பிறப்பு என்பதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.

இந்தநிலையில் சபரிமலையில் பெண்களும் தரிசனத்திற்கு செல்வதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு 7 பேர் கொண்டு அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. அது வரையிலும் நீதிமன்ற அனுமதிப்படி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.