பதற்றமான சூழ்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த பெண் செய்தியாளர் ஒருவர் பாதி வழியிலேயே திரும்பி சென்று விட்டார். பக்தர்கள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை என்பதால் தான் திரும்பி செல்லும் முடிவை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

 சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பூஜை நடத்தப்படும். அந்த வகையில் மாதாந்திர பூஜைக்காக நேற்று மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோயிலுக்கு பெண்கள் சிலர் வருகை தந்தனர். ஆனால், அவர்களது வருகைக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள், பெண்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டக்காரர்களின் எதிர்ப்பு காரணமாக பெண்கள் கோயிலுக்கு செல்லாமல் வழியிலேயே திரும்பினர்.

 

செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனால் நிலக்கல் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கலைப்பதற்காக அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலைந்து செல்லும்படி கூறி இலேசாக தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடிக்கு எதிராக இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் போலீசார் மீது கற்களைக் கொண்டு வீசினர். பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து சபரிமலை சுற்றுவட்டார பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. 

இந்த நிலையில், இன்று காலை லக்னோவைச் சேர்ந்த சுகாசினி ராஜ் என்ற பெண் செய்தியாளர், சபரிமலைக்கு சென்றார். ஆனால் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர், சபரிமலைக்கு செல்லாமல் திரும்பி விட்டார். அப்போது, சுகாசினிக்கு எதிராக சில பக்தர்கள் Go Back என்று கோஷம் எழுப்பினர். இது குறித்து கருத்து தெரிவித்த சுகாசினி, சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பு வெளியான காரணத்தால் வந்தேன். நான் செய்தி சேகரிக்கவே இங்கு வந்தேன். அதிகாலையில் மலையடிவாரத்தில் யாரும் இல்லை. அதனால் எளிதாக உள்ளே வந்து விட்டேன். 

ஆனால், பாதியில் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த போலீஸாரிடம், நான் ஒரு பத்திரிக்கையாளர். மேலே செல்ல எனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டேன். அவர்களும் எனது பாதுகாப்புக்காக உடன் வந்தனர். வழியில் போலீஸாருக்கும் பக்தர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் பதற்றமான சூழல் உருவானது. பக்தர்கள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. அதனாலே திரும்பிச் செல்லும் முடிவை எடுத்தேன். மீண்டும் செல்லும் எண்ணமில்லை என்று கூறினார்.