கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் என பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளதாக கேரள தேவசம் கமிட்டி அறிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுவதும் சபரிமலைக்கு இருமுடி கட்டி வந்து ஐய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். தற்போது மண்டல பூஜைக்காக கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து தை மாதம் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளாக சபரிமலை என்றே அழைக்கப்பட்டு வந்த இந்த கோவிலின் பெயரை தற்போது சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் என பெயர் மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் பல தர்மசாஸ்தா கோயில்கள் கேரள தேவசம் போர்டின் கீழ் செயல்பட்டு வந்தாலும் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி சபரிமலையில் தான் புனிததன்மையோடு பிரத்யேகமாக வீற்றிருப்பதால் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கபட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது