சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜைகள் இன்று தொடங்கியது.
உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளா மாநிலத்தில் மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, பதினெட்டாம் படியேறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் இந்த மண்டல காலத்தில் சபரிமலையை நோக்கி பக்தர்கள் திரள்வார்கள்.
இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைகள் இன்று தொடங்கியது. இதற்காக நேற்று மாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடந்தது. இன்றில் இருந்து டிசம்பர் 27 ம் தேதி வரை கோவில் நடை தினமும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27 அன்று முக்கியத்துவம் வாய்ந்த மண்டல பூஜை நடைபெற்ற பிறகு இரண்டு நாட்கள் கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30 ம் தேதி கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது.
கார்த்திகை 1ம் தேதியான இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து மண்டல விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் சபரிமலையில் பெண்களும் தரிசனத்திற்கு செல்வதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு 7 பேர் கொண்டு அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. அது வரையிலும் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. கேரள அரசும் காவல்துறையும் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் பாதுகாப்பு தர மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 17, 2019, 12:25 PM IST