ஜனநாயகத்தின் வேர்களான மதச்சார்பின்மையையும், பேச்சு உரிமையையும் இருண்ட சக்திகள் அழிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன, அதற்கு இடம் கொடுக்க கூடாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகத் தாக்கியுள்ளார்.

சுதந்திரப் போரட்டத்தில் பங்கேற்காத, வௌ்ளையனே வௌியேறு இயக்கத்தை எதிர்த்த சில அமைப்புகளும் இங்கு இருக்கறது என்பதைகண்டிப்பாக மறந்துவிடக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், பாஜனதா கட்சியையும் மறைமுகமாக சுட்டிக்காட்டி சோனியா கண்டனம் தெரிவித்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வௌ்ளையனே வௌியேறு இயக்கம் தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி மக்களவையில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது-

அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, அனைவரும் சமம், சமத்துவம், சமவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த மதிப்புகளை  வெறுப்பு அரசியல், பிரித்தாளும் அரசியல் மேகங்கள் சூழ்ந்து இருப்பதாக உணர்கிறேன்.

நாட்டில் மதச்சார்பின்மை, ஜனநாயக மற்றும் சுதந்திரம் ஆகியவை மிகுந்த ஆபத்தில் சிக்கி இருக்கின்றன. எந்த ஒரு விஷயத்தையும் வௌிப்படையாக விவாதிக்க, அது தொடர்பாக சுதந்திரமான கருத்துக்களைக் கூறும் உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

இருண்ட சக்திகள் எழுந்துவிட்டதா?.நம்முடைய சுதந்திரத்துக்கு ஏதேனும் பங்கம் வந்துவிட்டதாக அச்சம் ஏற்படுகிறதா?. ஜனநாயகத்தின் வேர்களான சமத்துவம், சமூக நீதி, சட்டத்தின் அடிப்படையிலான முறை, பேச்சுரிமை ஆகியவற்றை அழிக்க இருண்ட சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

நாம் சுதந்திரத்தையும், பேச்சுரிமையும் , ஜனநாயகத்தையும் பாதுகாக் வேண்டுமானால், அழிக்கும் சக்திகளுக்கு எதிராக போராடி வீழ்த்த வேண்டும். குறுகிய மனநிலை, பிரித்தாளும் தன்மை, வகுப்புவாதம் ஆகியவற்றை கொண்ட நாடாக இந்தியா மாறுவதை நாம் அனுமதிக்க கூடாது.  நம்மால் முடியாவிட்டால் கூட, மதவாத சக்திகளை வெற்றி பெற விட்டுவிடக் கூடாது.

சுதந்தரப் போராட்ட காலத்தில் வௌ்ளையனே வௌியேறு இயக்கத்தை சில அமைப்புகளும், சிலரும்  எதிர்த்தார்கள்,(ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா) அவர்களுக்கு சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரம் பெற்றுக்கொடுத்ததிலும் எந்தவிதமான பங்கும் இல்லை என்பதை நாம் கண்டிப்பாக மறந்துவிடக்கூடாது

சுதந்திரப் போராட்ட காலத்தில் பண்டிட் ஜவஹர்லால் நேரு பல ஆண்டுகள் சிறைவாசம் இருந்தால், காங்கிரஸ் தொண்டர்கள் சிறையில் இருந்தனர், பலர் சிறையிலேயே மடிந்தனர். வௌ்ளையனே வௌியேறு இயக்கம் நடந்த போது, ஆங்கிலேயர்களால் ஏராளமான அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஆனால், அந்த இயக்கத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.