Rs.75 thousand fine for family members who do not use toilet

மத்தியப் பிரதேச மாநிலம், பெட்டுல் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை மதிக்காமல் திறந்த வெளியை கழிப்பிடமாக்கிய குடும்பத்தினருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டது.

பெட்டுல் மாவட்டத்தில் உள்ள ராம்பாக்கேதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 43 பேருக்கு விளக்கம் கேட்டு கிராம சபை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராம்பாக்கேதி கிராம பஞ்சாயத்தின் ஊழியர் குன்வர்லால் கூறுகையில், “ தூய்மை இந்தியா திட்டத்தை கடைபிடிக்க கிராம மக்களுக்கு தீவிரமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதமாக, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்கு எச்சரிக்கை செய்தும் கேட்கவில்லை. இவர்கள் வீடுகளில் கழிப்பறை வசதி இருந்தும் பயன்படுத்தவில்லை.

இதையடுத்து மத்தியப் பிரதேசத்தின் தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத்) விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்பட்ட அந்த குடும்பத்தைச் சேர்ந்த 10 பேருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் 10 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மற்ற குடும்பங்களைச் சேர்ந்த 43 பேருக்கு நோட்டீஸ்அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.