ரூபாய் நோட்டு தடைகாலத்துக்குப் பின் நாட்டில் 29 மாநிலங்களில் ரூ.11.23 கோடி கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார்.

மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்து  அவர் பேசுகையில், “ ரிசர்வ் வங்கி சமீபத்தில் வௌியிட்ட மொபைல் ஆப்ஸ்(செயலி) மூலம், வாடிக்கையாளர்கள் புதிய ரூ.500, ரூ. 2000 நோட்டகளின் பாதுகாப்பு அம்சங்களை அறிந்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்கள் அந்த செயலியை பயன்படுத்தி, ரூபாய் நோட்டுகளின் உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்ஸ் கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யமுடியும்.

தேசிய குற்ற ஆவண அமைப்பின் அறிக்கையின் படி, ரூபாய் நோட்டு தடைக்குப்பின், கடந்த 14-ந்தேதி வரை,  29 மாநிலங்களில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 797 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.11.23 கோடியாகும்.

மேலும், புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள், வடிவம், நிறம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.