குஜராத்தில் இருந்து நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் கடன் மோசடி செய்து லண்டனுக்கு தப்பி இருக்கும் நிலையில், அடுத்ததாக ரூ.5 ஆயிரம் கோடி வங்கியில் மோசடி செய்து குஜராத்தைச் சேர்ந்த நிதின் சந்தேசரா கம்பி நீட்டியுள்ளார். நிதின் சந்தேசரா தனது குடும்பத்துடன் ஆப்பிரிக்க நாடாந நைஜீரியாவில் தஞ்சும் புகுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், மற்ற நாடுகளைப் போன்று எளிதாக நைஜிரியாாவில் இருந்து ஒருவரை நாடுகடத்திவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

குஜராத்தின் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் நடத்தி வருபவர் நிதின் சர்தேசரா. இவர் ஆந்திரா வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு இவர் மீதும், இவரின் சகோதரர் சேதன் சர்தேசரா, மைத்துனி தீப்தி பென் சர்தேசரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் அனுப் கார்க், சார்டட் அக்கவுண்ட்டன்ட் ஹேமந்த் ஹதி உள்ளிட்டப் பலரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். 

இந்நிலையில், நிதின் சர்தேசராவின் குடும்பத்தினர் அரபுநாடுகளுக்கு தப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய்களை வெளிநாட்டில் பினாமி பெயரில் முதலீடு செய்திருப்பதாக நிதின் சர்தேசரா மீது குற்றம்சாட்டப்பட்டு,  அதன் மீது நடவடிக்கை எடுக்க விசாரணையும் நடந்து வந்தது. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ககன் தவான் மற்றும் கார்க் ஆகியோரைக் கைது செய்த அமலாக்கத்துறை சர்தேசராவின் ரூ.4,700 கோடியை முடக்கி ஜூன் மாதம் நடவடிக்கை எடுத்தனர். கடந்த மாதம் துபாயில் நிதின் சர்தேசரா கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் அவர் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கப்பிரிவினர் தெரிவித்தனர். 

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடனும், இன்டர்போல் உதவியுடனும் ரெட்கார்னர் நோட்டீஸ் அளித்து நிதின் சர்தேசராவை இந்தியா அழைத்துவரவும் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் துபாயில் இருந்து நிதின் சர்தேசரா தனது குடும்பத்துடன் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு தப்பிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கன்றன. ஏனென்றால், இந்தியாவுக்கும், நைஜீரியாவுக்கும் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ள எந்தவிதமான ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்பதால், அவர்கள் அந்த நாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.