பீகாரில் ரூ.396 கோடியில் கட்டப்பட்ட கங்கை கால்வாய் சுவர் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைக்கும் ஒருநாள் முன்பாக இடிந்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால், முதல்வர் வருகை ரத்து செய்யப்பட்டது.

பீகார், ஜார்கண்ட் மாநிலங்களுக்கு பயன்படும் வகையில், கடந்த 1977ம் ஆண்டு ரூ.13.88 கோடி செலவில் கங்கை கால்வாய் திட்டம் போடப்பட்டது. அதன்பின் கடந்த 2008ம் ஆண்டு இந்த கால்வாய் ரூ.389கோடி மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. பாகல்பூர் மாவட்டம், பட்டீஸ்வரஸ்தன் பகுதியில் இந்த கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இந்த கால்வாய் மூலம் பீகார் மாநிலத்தில் 22 ஆிரத்து 816 ஹெக்டேர் நிலமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 ஆயிரத்து 887 ஏக்கர் நிலவும் பாசன வசதி ெபறும்.

இந்த கால்வாய் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இன்று(செவ்வாய்கிழமை) கால்வாய் திறந்து வைக்கப்பட்டு, மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட  இருந்தது. இதற்காக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில்,  நீர்பாசனத்துறை அமைச்சர் ரஞ்சன் சிங் லாலன், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதானந்த் சிங் ஆகியோர் பங்கேற்க இருந்தனர்.

இதற்காக அரசு சார்பில் அனைத்து நாளேடுகளில் விளம்பரம் தரப்பட்டு இருந்தது, கால்வாய் இருக்கும் பகுதிகளிலும் அரசின் சார்பில், கட்சியின் சார்பிலும் தோரணங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், கால்வாயை திறந்து வைக்க இருந்த ஒரு நாள் முன்பாக, அதாவது நேற்றுமுன்தினம் கால்வாயின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், கால்வாயில் தேங்கி இருந்த நீர் அனைத்தும் வெளியேறி சாலைகளில் வெள்ளமாக ஓடியது.

இதனால், காகல்கான், என்.டி.பி.சி. நகர்பகுதி, காகல்கான் நகர நீதிமன்ற நீதிபதி இல்லம், ஏராளமான வீடுகளில் கால்வாய் நீர் புகுந்தது.

இதையடுத்து, உடனடியாக நீர்வளத்துறை முதன்மை செயலாளர் அருண் குமார் சிங், பாகல்பூர் மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி. உள்ளிட்டோர் விரைந்து வந்து கால்வாய் பகுதியில்  மணல் மூடைகளை வைத்து நீர் வெளியேறுவதை தடுத்து பணிகளை பார்வையிட்டனர். மேலும், நீர் தேங்கி இருக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து நீரே வெளியேற்றவும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பீகார் அரசு முதல்வரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டது. அந்த அறிவிப்பில்,  “ பாகல்பூரில் கால்வாய் திறப்பு விழாவுக்கு வர இருந்த முதல்வர் நிதஷ்குமார் நிகழ்ச்சி ரத்து தொழில்நுட்ப காரணங்களால் செய்யப்பட்டது’’ எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.