Romance in flight

காதலிப்பவரிடம், உங்கள் காதலைச் சொல்ல எத்தனையோ வழிகள் உள்ளன. காதலிப்பதைவிட, காதலிப்பவரிடம் சென்று நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று கூறுவதுதான் கடினம். அதை செய்து விட்டால் காதலில் பாதி கிணற்றை தாண்டி விட்டதாகவே அர்த்தம். 

அந்த வகையில் காதலிக்கு, தனது காதலை இளைஞர் ஒருவர் வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அதுவும் விமானத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் அந்த இளைஞர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து கோவா செல்வதற்காக அந்த இளம் பெண் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தார். அந்த விமானத்தில் நரேந்திர அனந்தானி என்ற இளைஞரும் ஏறினார்.

விமானத்தில் ஏறிய நரேந்திர அனந்தானி சிறிது நேரத்தில் இண்டர்காம் வாயிலாக அந்த பெண்ணின் பெயரைக் கூறி அழைத்தார். பெயர் குறிப்பிட்ட அந்த இளம் பெண்ணும் அவரை நோக்கி வந்தார்.

அந்த பெண் அருகே வந்ததும், அவர் முன் மண்டியிட்ட நரேந்திர அனந்தானி, தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டார். அதற்கு அந்த இளம் பெண்ணும் சம்மதம் என்று கூறினார். 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற பயணிகளும், விமான ஊழியர்களும் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நரேந்திர அனந்தானியும், அந்த பெண்ணும் ஏற்கனவே காதலித்து வந்ததாகவும், காதலிக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் அனந்தானி இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.