அசாம் மாநிலத்தில்  அகமது அலி என்ற ஓர்  இஸ்லாமிய ரிக்‌ஷா தொழிலாளி  ஏழை,எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் 9 பள்ளிக்கூடங்களைத் திறந்து நடத்தி வருவது அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

அசாம் மாநிலம் கரீம்கஞ்சு மாவட்டத்தை சேர்ந்தவர் அகமது அலி .  ரிக்‌ஷா ஓட்டுனரான இவர், . தனது ஆரம்ப காலத்தில் குடும்ப சூழ்நிலையால்  கல்வி பயில முடியவில்லை. குடும்ப வறுமை காரணமாக இளம் வயதிலேயே ரிக்‌ஷா ஓட்டத்துவங்கினார்.  ஆனாலும் கல்வி மீது இவருக்கு தீராக தாகம் இருந்தது. 

இந்நிலையில்  எந்த ஒரு ஏழை குழந்தையும் வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று எண்ணம் அவரது மனதில் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. இதற்காக என்ன செய்து என்று தொடர்ந்து யோசித்து வந்தார்.

அப்போது தான் அவருக்கு அந்த ஐடியா தோன்றியது. ஆம் படிக்க வதிதி இல்லாத  ஏழை குழந்தைகளுக்காக பள்ளிக் கூடம் கட்ட  முடிவு செய்தார். ஆனால் அவரிடம் பள்ளி கட்டும் அளவிற்கு போதிய பணம் இல்லை. எனவே தனது சொந்த நிலத்தை விற்பனை செய்தார். மேலும் கிராம மக்களிடம் இருந்து பணம் சேகரித்தார்.

இதில் கிடைத்த பணத்தைக்கொண்டு  1978-ம் ஆண்டு முதன் முறையாக ஏழை குழந்தைகளுக்காக ஒரு  பள்ளிகூடத்தை திறந்தார். அந்த பள்ளிக்கூடத்தை திறம்பட நடத்தி வெற்றி கண்ட அகமது அலி,  கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் தனது பகுதியில் ஒன்பது பள்ளிகளை திறந்து வைத்து  அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

இவர் மூன்று ஆரம்ப பள்ளிகளையும், ஐந்து ஆங்கில வழி கல்வி கற்பிக்கும் நடுநிலை பள்ளிகளையும், ஒரு உயர்நிலைப்பள்ளிகளையும் கட்டி உள்ளார். விரைவில் ஒரு கல்லூரியும் கட்ட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய அவர், படிப்பறிவின்மை எந்த ஒரு சமூகத்திற்கும் சாபக்கேடு. இதனால் வாழ்வதற்கான ஆதாரமே இல்லாமல் போகும். மேலும் பள்ளியில் பயிலும் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு உயருவது தனக்கு மிகுந்த திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.