ஆறு மாத கால சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் அல்லது தன்னை பரோலில் விடவேண்டும் என மேற்கு வங்க ஆளுநருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

62 வயதான அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் கடந்த மே 9-ம் தேதி அளித்தது, இதனைத் தொடர்ந்து நீண்டகாலம் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்துவந்த நிலையில், அவர் கோவையில் கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டு கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் அவர் அங்குள்ள பிரசிடென்சி இல்லத்தில் வைக்கப்பட்டார், அவருக்கு உடல்நிலை சரியில்லாததன் காரணமாக தற்போது கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் மேற்குவங்க ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் அல்லது பரோலில் விடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மனுவில் தனது மருத்துவ சிகிச்சை காலம் வரை ஜாமீன் தரவேண்டும் அல்லது பரோலில் விடவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது வழக்கறிஞர்களின் மூலம் இந்த மனுவை மேற்கு வங்க ஆளுநருக்கு அனுப்பியுள்ள அவர், தனக்கு ஜாமின் அளிப்பதற்கு எந்த நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்று நடப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த கோரிக்ககை மனு விரைவு தபாலில் மேற்கு வங்க ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவரது சட்ட ஆலோசகர் மேத்யூ நெடும்பரா தெரிவித்துள்ளார்.