Ayodhya Ram Mandir| கோவில் திறப்பு விழாவிற்கு வரும் VVIP-களுக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பு! என்னென்ன தெரியுமா?
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தொடர்பான விஐபி-களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கும் பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதனை அம்மாநில அரசு மேற்பார்வையிடுகிறது. ராமர் கோயிலுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது, கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி புதிய கோயில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும், அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் போன்ற பிரமுகர்களுக்கு ராமர் கோயில் அறக்கட்டளை அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. இந்த மதிப்பிற்குரிய விருந்தினர்களின் பட்டியலில் உலகெங்கிலும் உள்ள 50 வெளிநாடுகளைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கலந்து கொள்ளவுள்ளார். ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த கரசேவகர்களின் குடும்பங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதன்படி, பிரதமர் மோடி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, ரத்தன் டாடா, நடிகர் அருன் கோவில், நடிகை தீபிகா சிக்கலியா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாபா ராம்தேவ், ஆர்,எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நீதிபதிகள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. 3000 விவிஐபிக்கள், 4000 துறவிகள் உட்பட சுமார் 7000 பேருக்கு ராம ஜென்மபூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
அழைப்பிதழில், விருந்தினர்கள் ஜனவரி 21-ஆம் தேதிக்குள் வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அழைக்கப்பட்ட விருந்தினர்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் ஜனவரி 22 ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெறும் நாளில் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜனவரி 20-ஆம் தேதி மாலை முதல் ஜனவரி 21- ஆம் தேதி வரை வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினர்களுக்கு இது கட்டாயம்!
- ஜனவரி 22ம் தேதி அயோத்திக்கு வரும் விவிஐபிக்கள் கட்டாயமாக ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
- பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்தில் மொபைல், பர்ஸ் அல்லது வேறு எந்த எலக்ட்ரானிக் கேஜெட்களையும் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
- அனைத்து விருந்தினர்களும் ஜனவரி 22 ஆம் தேதி காலை 11 மணிக்குள் கோவில் திறப்பு விழா வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
- சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி சுமார் 3 மணி நேரம் நடைபெறும். அந்த இடத்தை அடைய ஒரு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும்.
- நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- பிப்ரவரி மாதத்தில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
- ஒரு அழைப்பிதழ் அட்டையில் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
- விவிஐபிகளின் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிரதமரின் பாதுகாப்பு கருதி உள்ளே நுழைய தடை விதிக்கப்படும்.
- குழந்தைகள் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- பிரதமர் மோடி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, அனைத்து விவிஐபிக்களும் கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொருவராக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
- அழைக்கப்பட்ட நபர்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வழங்கிய தனிப்பட்ட அடையாள அட்டையுடன் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவர்.