செல்லாத ரூபாய் நோட்டு முடிவு என்பது அவசரப்பட்டு எடுக்கவில்லை, ஆழ்ந்த யோசித்த பின்பே எடுத்திருக்கிறோம். இந்த முடிவால் இதுவரை வங்கிகளுக்கு பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகள் ரூ.11.85 லட்சம் கோடி டெபாசிட்டாக வந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக்குழு தனது 2-வது நிதிக்குழு ஆய்வு அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது. அதன்பின் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

அவசரப்படவில்லை

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த முடிவு அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. அது விரிவாக ஆலோசிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. அதை தீர்ப்பது தான் எங்களின் தலையாய நோக்கமாக இருந்து வருகிறது.

ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே இருக்கும். பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரூ.11.85லட்சம்

இதுவரை ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வங்கிகளுக்கு ரூ.11.85 லட்சம் கோடி டெபாசிட்டாக வந்துள்ளது. மக்களுக்கு தேவையான புதிய ரூபாய் நோட்டுகள் சரளமாக கிடைப்பதற்காக, ரிசர்வ் வங்கி தனக்குச் சொந்தமான ரூபாய் அச்சடிக்கும் நிலையங்களில், முழுமூச்சாகப் பணியாற்றி வருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரூபாய் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரூ.4 லட்சம் சப்ளை

கடந்த நவம்பர் 10-ந்தேதியில் இருந்து, டிசம்பர் 5-ந்தேதி வரை வங்கிகளுக்கு ரூ.4 லட்சம் கோடி பல்வேறு மதிப்புகளில், புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி சப்ளை செய்துள்ளது.

குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை,ரிசர்வ் வங்கி தனது கவுன்ட்டர்கள் மற்றும் வங்கிக் கிளைகள் மூலம், 19100 கோடி தாள்களை மக்களுக்கு அளித்துள்ளோம். இது கடந்த 3 ஆண்டுகளில் சப்ளைசெய்த அளவைக்காட்டிலும் அதிகமாகும். புதிய ரூ.100, ரூ.500 நோட்டுகளை அதிகமாக அச்சடிக்க வேண்டும் என்பதற்காக அச்சகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கூடுதல் அவகாசம்?

மக்கள் புதிய கரன்சிகளை பதுக்க வேண்டாம். சூழ்நிலையை சீராக்க தடையில்லாமல் அதை புழக்கத்தில் விட வேண்டும். புதிய ரூ.2000 நோட்டுகள் அதிகமாக புழக்கத்துக்கு வரும் போது, அடுத்து வரும் காலங்களில் அதன் பலனை நீங்கள் காணலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.