ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா தனது பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உர்ஜித்படேல் ஆளுநராகப் பதவி உயர்வு பெற்றபின், ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக விரால் விரால் ஆச்சார்யா கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி நியமிக்கப்பட்டார். இவரது 3 ஆண்டு பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளன. 

இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். அவருக்கும், மத்திய நிதியமைச்சகத்துக்கும் இடையேயான கருத்து மோதல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது. இருப்பினும் தனிப்பட்ட சொந்த காரணத்தினாலேயேதான் ராஜினாமா செய்ததாக உர்ஜித் படேல் தெரிவித்தார். படேலின் ராஜினாமாவைத் தொடர்ந்து மத்திய நிதி ஆணையக்குழுவின் உறுப்பினர் சக்திகாந்த தாஸ் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

உர்ஜித் பட்டேல் பதவி விலகியதும் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யாவும் பதவி விலக உள்ளதாக அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால், அதில் உண்மை இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்திருந்தது. இதனிடையே மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உள் விவகாரங்களில் தலையிடுவது சரியல்ல என விரால் ஆச்சார்யா முதல் முறையாக ஒரு பொது மேடையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிய 6 மாதங்கள் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.