வங்கியில் கே.ஒய்.சி. விதிமுறையைப் பின்பற்றி கணக்கு வைத்து இருப்பவர்கள், பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரூ. 5 ஆயிரத்துக்குமேல் இம்மாதம் 30-ந்தேதி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றே நேற்று வெளியிட்டுள்ளது.

கடந்த 19-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பில், செல்லாத ரூபாய் நோட்டுளை ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக, ஒருமுறை மட்டுமே வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திடீரென பல்டி அடித்து, இப்போது அந்த உத்தரவை மாற்றியுள்ளது.

பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தடைசெய்து கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தார். அதன்பின் மக்கள் வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிக்கணக்கில் டெபாசிட்செய்ய அரசு கெடு விதித்து இருந்தது.

பழைய அறிவிப்பு

 கடந்த 19-ந்தேதி வெளியிட்ட ரிசர்வ் வங்கி அறிவிப்பில், செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் ரூ. 5 ஆயிரத்து மேல் ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி அதிகாரிகள் இருவர் விசாரணை செய்து, பதிலை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்வார்கள்.

ரூ. 5 ஆயிரத்துக்கு குறைவாக பல முறை டெபாசிட் செய்து இருந்தாலும், அது மொத்தமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் அது குறித்து விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

டிசம்பர் 30-ந்தேதி வரை செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்ய காலக்கெடு அளித்துள்ள பிரதமர் மோடி அரசு, திடீரென பல்டி அடித்து, அப்படி கெடு விதித்துள்ளது குறித்து மக்கள் தரப்பிலும், அனைத்து கட்சிகள் தரப்பிலும் கடுமையான கண்டங்கள் எழுந்தன.

புதியஅறிவிப்பு

இதையடுத்து, தனது முந்தைய அறிவிப்பை திருத்தி ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

கே.ஒய்.சி. விதிமுறைகளின் படி வங்கியில் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் கணக்கில், செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய வரும்போது அவர்களை வங்கி அதிகாரிகள் கேள்வி கேட்கவோ, தொந்தரவு செய்யவோ மாட்டார்கள். அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும், ரூ. 5 ஆயிரத்துக்கு அதிகமாக டிசம்பர் 30-ந்தேதி வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

அதே சமயம், கே.ஒய்.சி. விதிமுறையைப் பின்பற்றாமல் வங்கிக்கணக்கு வைத்து இருப்பவர்கள், செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ. 5 ஆயிரத்துக்கு மேல் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். 2-வது முறை டெபாசிட் செய்ய வரும்போது, வங்கி அதிகாரிகளால் கேள்விக்கு ஆளாவார்கள். அவர்களின் பதில் எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.