பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது ரிசர்வ் வங்கியா? மத்திய அரசா? விளக்கம் கேட்கிறது நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக் குறித்து, விளக்கமளிக்க வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி முதல், 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாத நோட்டுகளாக அறிவிக்கப்பட்டன. இதனால், நாடுமுழுவதும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளில் குவிந்தனர்.

புதிய 500, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வரும் போதிலும், பணப்புழக்கத்தை சமாளிக்க இவை போதிய அளவில் கிடைக்கவில்லை.

இதனால், பொதுமக்கள் சொல்லொணா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஏ.டி.எம். இயந்திரங்களும் முழுமையாக செயல்படாததால், மக்களின் இன்னல் மேலும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது ரிசர்வ் வங்கியா? அல்லது மத்திய அரசா? என நாடாளுமன்ற பொதுக்கணக்குக்குழு ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நடவடிக்கை எந்த காரணத்திற்காக எடுக்கப்பட்டது, திடீரென இந்த நடவடிக்கையை அறிவித்தது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நாடாளுமன்ற குழு எழுப்பியுள்ளது.

இவற்றுக்கு விளக்கமளிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரும் 28-ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும், நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.