Regrets Accepted Shiv Sena MP Ravindra Gaikwad Can Fly Again

ஏர் இந்தியா ஊழியரை அடித்ததற்கு சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் மன்னிப்பு கோரியதையடுத்து, விமானத்தில் பறக்க விதித்திருந்த தடையை மத்தியஅரசு நேற்று விலகிக்கொண்டது.

இதையடுத்து விமான ஊழியரை செருப்பால் அடித்தது தொடர்பாக கடந்த 2 வாரங்களாக நீடித்து வந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், ஏர் இந்தியா ஊழியர்கள் கெய்க்வாட் தடையை நீக்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஊழியருக்கு செருப்படி

சிவசேனா கட்சி எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஏர் இந்தியா விமானத்தில்புனேயில் இருந்து டெல்லிக்கு பயணித்தார். அப்போது இவருக்கும் விமான மேலாளருடன் இடையே இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில், ஊழியரை செருப்பால் அடித்தார் கெய்க்வாட்.

அனுமதி மறுப்பு

இந்த விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்ததையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களும் கெய்க்வாட்டை விமானத்தில் ஏற்ற மறுத்தன. பல முறைடிக்கெட் முன்பதிவு செய்தும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மன்னிப்பு கடிதம்

இந்நிலையில், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி நேற்றுமுன்தினம் ரவீந்திரகெய்க்வாட், உள்ளிட்ட சிவசேனா எம்.பி.க்கள் அமளி செய்தனர். அதன்பின், தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தும், இதுபோல் இனி சம்பவங்கள் நடக்காது என்றும் தடையை விலக்கக் கோரி மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவுக்ு கெய்க்வாட் கடிதம் எழுதினார்.

தடை நீக்கம்

இதையடுத்து, மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை ஏர்இந்தியா விலக்கிக் கொள்ள உத்தரவிட்டது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அவர்களிடம் தவறாக நடந்து கொள்பவர்களிடம் இருந்து காப்பதும் ஏர் இந்தியா நிறுவனத்தின் கடமையாகும். ஊழியர்களின் மான்பைக் காக்க கடுமையான நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்குகிறோம். எங்களைத் தொடர்ந்து மற்ற விமானநிறுவனங்களும் நீக்கும்’’ என்றார்.

எதிர்ப்பு

ஆனால், ரவீந்திர கெய்க்வாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த அமைப்பின் இயக்குநர் அஸ்வானி லோஹானி கூறுகையில், “ ஏர் இந்தியா ஊழியர் சுகுமாரை அடித்ததற்காக எம்.பி. கெய்க்வாட் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். நாடாளுமன்றம் அல்லது அமைச்சகம் தடையை நீக்கியது ஊழியர்களின் ஒழுக்கநெறியை பாதிக்கும். 

மறுபரிசீலனை

கெய்க்வாட்டை விமானத்தில் ஏற்றுவது இன்னும் பாதுகாப்பற்றதுதான். ஊழியர்களின் நலனுக்கும் உகந்தது அல்ல. ஆதலால், இந்த தடையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்திய வர்த்தக விமான நிறுவனங்களின் பைலட் அமைப்பும் கெய்ட்வாட்டுக்கு தடை நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.