இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் கடந்த ஜனவரி மாதம் சாலையில் அமர்ந்து போராடினர்.

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த 5 ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கியது. இதன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் டெல்லி காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த 23-ம் தேதி மீண்டும் போராட்டத்தை தொடங்கினர் மல்யுத்த வீராங்கனைகள்.

டெல்லி ஜந்தர் மந்திர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பலர் கலந்து கொண்டனர். பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி கனோட் ப்ளேஸ் காவல்நிலையத்தில் இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண், தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்காக நார்கோ பகுப்பாய்வு அல்லது பாலிகிராஃப் சோதனைக்கு உட்படுத்தத் தயாராக இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர் ஒரு நிபந்தனை வைத்துள்ளார்.

ஃபேஸ்புக்கில், பிரிஜ் பூஷன் சரண் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், "எனது நார்கோ சோதனை, பாலிகிராபி சோதனை அல்லது பொய் கண்டறிதல் ஆகியவற்றைப் பெற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் என்னுடன் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரும் இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது எனது நிபந்தனை. இரு மல்யுத்த வீரர்களும் தயாராக இருந்தால், அவர்களின் சோதனையை முடித்து, பின்னர் பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிக்கவும், நானும் இதற்கு தயாராக இருக்கிறேன் என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்.

டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து, ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டு தனித்தனி காவல்நிலைய வழக்குகள் பிரிஜ் பூஷன் சரண்மீது பதிவு செய்யப்பட்டன. அவர்கள் தாக்கல் செய்த நிலை அறிக்கையின்படி, இந்த விவகாரத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையால் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..9 தோல்வி எடப்பாடி..சேலத்தில் மாநாடு.! கொங்கு மண்டலத்தில் சீக்ரெட் மீட்டிங் - ஓபிஎஸ் Vs இபிஎஸ் மோதல்