Ravi Shastri is appointed as the head coach of the Indian team
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரியை பி.சி.சி.ஐ. ஆலோசனைக் கமிட்டி நியமித்துள்ளது. இவர் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிவரை பயிற்சியாளராகத் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே, கேப்டன் விராட்கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் 20–ந் தேதி அந்த பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்தவற்கான காலக்கெடு சனிக்கிழமையோடு முடிவடைந்தது. இதையொட்டி பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது.
கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களான முன்னாள் கேப்டன் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் நேர்காணலை நடத்தினார்கள். மற்றொரு உறுப்பினரான டெண்டுல்கர் லண்டனில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் சக உறுப்பினர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நேர்காணலில் ரவிசாஸ்திரி, ஷேவாக், லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்ட் பைபஸ் உள்பட 5 பேர் நேரில் ஆஜராகி தங்களது பயிற்சி திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்த நேர்காணலுக்குப்பின் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கிரிக்கெட் ஆலோசனைக்குழு தலைவரான கங்குலி, எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவை. இந்திய அணி கேப்டனுடன் தலைமை பயிற்சியாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு, செவ்வாய்கிழமை மாலைக்குள் தலைமை பயிற்சியாளர் யார் என்று அறிவிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, புதிய தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
