குஜராத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், முதன்முறையாக நோட்டாவுக்கு வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிடுகிறார். 

இதனிடையே, காங்கிரஸில் இருந்து அடுத்தடுத்து 7 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதன்காரணமாக மீதமுள்ள 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காக பெங்களூருக்கு அனுப்பப்பட்டனர். 

இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதை தடுக்கும் வகையில், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அம்மாநில காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நோட்டா முறையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "மாநிலங்களவை தேர்தலில் ‘நோட்டா’ காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவரப்பட்டது" என கூறினார். 

"நோட்டா வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப்பட்ட அதிகமான காங்கிரஸ் எம்.பி.க்களே அவையில் உள்ளனர், அவர்கள் மூன்று ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டனர், இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.

மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம் பெறுவது தொடர்பான ஜனவரி 2014-ம் ஆண்டைய அறிவிப்பை கூட அவர்கள் பார்க்கவில்லை. மத்தியில் 2014 மே மாதம்தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது, காங்கிரஸ் தலைமையிலான அரசின் விதிமுறையே செயல்படுத்தப்படுகிறது,” என கூறினார்.