மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஸ்ரீனிவாசை எலிகள் கடித்துள்ளன. இதை அடுத்து எலி கடியால் ஏற்பட்ட காயத்திற்கும் சேர்த்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தெலுங்கானா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியை எலிகள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையின் ஐ.சி.யு.-வில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சுவாச குழாய் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக ஸ்ரீனிவாஸ் வாரங்கல் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையின் ஐ.சி.யு.-வுக்கு மாற்றப்பட்ட ஸ்ரீனிவாசுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
எலி கடி பிரச்சினை:
இந்த நிலையில், ஐ.சி.யு.-வில் சுற்றி திரிந்த எலிகள் ஸ்ரீனிவாஸ் கை மற்றும் கால்களை கடித்தன. எலிகள் கடித்ததில் ஸ்ரீனிவாசுக்கு இரத்த காயம் ஏற்பட்டது. முன்னதாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், போதிய பண வசதி இல்லாத காரணத்தால் சில தினங்களுக்கு முன்பு தான் ஸ்ரீனிவாஸ் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஸ்ரீனிவாசை எலிகள் கடித்துள்ளன. இதை அடுத்து எலி கடியால் ஏற்பட்ட காயத்திற்கும் சேர்த்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மருத்துவமனையில் சுற்றி திரியும் எலிகள் தான் தன்னை கடித்தன என்று ஸ்ரீனிவாஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், இன்று காலை (மார்ச் 31) மீண்டும் அவரை எலிகள் கடித்துள்ளன.

என்ன செய்தீர்கள்:
"எலிகள் அவரின் விரல்கள், கை மற்றும் கால்களை கடித்தன. இதனால் அவர் படுத்திருந்த படுக்கை முழுக்க இரத்தமாகி விட்டது. இதை பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்," என ஸ்ரீனிவாஸ் சகோதரர் தெரிவித்தார். எலிகள் கடிப்பது பற்றி புகார் அளித்ததற்கு, அங்க பணியாற்றி வரும் ஊழியர்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் என மீண்டும் கேள்வி கேட்டதாக அவர் தெரிவித்தார்.
இதுதவிர எலி பிரச்சினை இருப்பது பற்றியும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் பதில் அளித்து இருக்கின்றனர்.
ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற சம்பவம் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அரங்கேறி இருக்கிறது. அப்போது எலிகள் மருத்துவமனையின் சவகிடங்கில் வைக்கப்பட்டு இருந்த சடலங்களை கடித்தன. தற்போது மருத்துவமனை முழுக்க எலிகள் கடித்து வருவதை அடுத்து நோயாளிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
